Friday, 27 September 2013

குஜராத்தின் உண்மை நிலை இதுதான்- ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !

2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான  ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி இந்து)
சரி, அப்படியானால் மோடியின் குஜராத்? இந்த ஆய்வு “குஜராத் மாடலையும்”, “வைபரண்ட் குஜராத்தையும்” உலகமே தரிசிக்கும்படி செய்துள்ளது. குஜராத்தின் ஓட்டைகளை மறைத்து வளர்ச்சியை நிலைநாட்டி விடலாம் என்று ஊடகங்களும் பேஸ்புக் போராளிகளும் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் இது போன்ற ஆய்வுகள் அவர்களை சந்தி சிரிக்க வைத்து விடுகின்றன.
பீகார் முதல்வர் நித்திஷ்குமார் தனது மாநிலம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அதற்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த கோரிக்கையை எழுப்பின. கடந்த மே மாதத்தில் பின் தங்கிய மாநிலங்களை கண்டறிவதற்கான அளவீட்டு முறையை பரிந்துரை செய்ய மத்திய அரசு ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது.
இது வரை இருந்து வந்த கட்கில்-முகர்ஜி ஃபார்முலாவில் மக்கள் தொகையை முதன்மையாகவும், தனிநபர் வருமானம், கல்வியறிவு போன்றவற்றை அடுத்தபடியாகவும் வைத்து மாநிலங்களின் முன்னேற்றம் அளவிடப்பட்டது. இந்த முறைக்கு மாற்றாக பின்வரும் 10 காரணிகளை சம முக்கியத்துவமுடையதாக கொண்டு மாநிலங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனிநபர் மாத நுகர்வு
கல்வி
மருத்துவம், சுகாதாரம்
வீட்டு உபயோக பொருட்கள்
வறுமை வீதம்
பெண்களின் கல்வியறிவு
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
நகர மயமாக்கல் வீதம்
நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
சாலை இணைப்புகள்

இவற்றைக் கொண்டு மாநிலங்கள் 0 முதல் 1 வரை இலக்கமிட்டு வரிசைப்படுத்தப்பட்டன. 0.6-க்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட 10 மாநிலங்கள் மிகப் பின் தங்கிய மாநிலங்கள் என்றும் 0.4-க்கும் 0.6-க்கும் இடையில் மதிப்பீடு செய்யப்பட்ட 11 மாநிலங்கள் பின்தங்கியவை என்றும் 0.4-க்கு குறைவாக மதிப்பீடு பெற்ற 7 மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்கள் என்றும் கருதப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்தியிருக்கிறது.
மாநிலங்கள் பட்டியல்
படம் : நன்றி தி இந்து.
இதன்படி பின் தங்கியிருப்பதற்கான குறியீட்டில் குறைவான புள்ளிகள் பெற்று கோவா (0.045) மிக அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், கேரளா (0.095) இரண்டாம் இட்த்திலும், தமிழ்நாடு (0.341) மூன்றாம் இடத்திலும், மிகவும் பின் தங்கிய மாநிலமாக ஓடிசா (0.798) கடைசி இடத்திலும் உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் பின் தங்கியிருப்பதில் 0.491 மதிப்பீடு பெற்று மாநிலங்களின் வரிசையில் 12-வது இடத்தில் உள்ளது. இது வளர்ச்சி குறைந்த மாநிலம் என்ற பிரிவில் வருகிறது. இந்த பிரிவில் வரும் மற்ற மாநிலங்கள் மேற்கு வங்காளம், நாகாலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசம்.
இது போன்ற புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தை அம்பலப் படுத்தினாலும் மக்களை முட்டாளாக, மூடர்களாக கருதி 12 ஆவது இடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தை முதலாவது இடம், முன்னோடி என்று ஊடகங்கள் முன்னிறுத்தி வருகின்றன.
வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதிலோ இல்லை மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிடுவதிலோ உள்ள இத்தகைய முதலாளித்துவ பொருளாதார ஆய்வுமுறைகளை நாங்கள் ஏற்பதில்லை. வினவிலும் அவற்றை விளக்கி பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால் இந்துமதவெறியர்களும், பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட மோடி ரசிகர்களும் இத்தகைய ஆய்வு முறைகளைக் கொண்டுதான் குஜராத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அந்த பிரச்சாரங்களுக்குரிய ஒரிஜினல் ஆவணங்களைப் பார்த்தாலே குஜராத் பின்தங்கியிருப்பது தெரியவரும். அந்த வரிசையில் இது மற்றுமொரு சாட்சி.
இதனால்தான் திருச்சி பொதுக்கூட்டத்திலும் குஜராத்தின் சாதனை என்று ஒரு வரியைக்கூட மோடி குறிப்பிடவில்லை. மோடி பொய் சொல்வதில் அஞ்சுபவர் இல்லை என்றாலும் அவரது பொய்கள் தோலுரிக்கப்பட்ட நிலையில் அந்த டாபிக்கே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு, பயங்கரவாதம் பக்கம் தாவி விட்டார். ஏனெனில் ஒரு பயங்கரவாதிதானே பயங்கரவாதத்தை குறித்து ஆழமாக பேச முடியும்!
மேலும் படிக்க

Saturday, 21 September 2013

சிவாஜி: வீரசிவாஜியா? பார்ப்பன அடிமையா?

சிவாஜியை வீரசிவாஜி என பாடப்புத்தகத்திலும், இந்துத்துவவாதிகளும் ஒரு நூற்றாண்டுக்காலமாக நம்மீது போலியான கட்டமைப்பை திணித்து நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்று உண்மை என்ன? சிவாஜி பிராமண இருண்டகால,வேதகால ஆட்சியை நிறுவ முயன்று தோற்றுப் போன ஒரு பிராமண அடிமை சிவாஜி.ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க அணியினர்  சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ மராட்டிய மாதிரி ஆட்சியை தங்கள் கனவாக கொண்டிருக்கும் அதே பாணியில் ஆட்சி அமைக்க துடிக்கும் அந்த முன்மாதிரி ஆட்சியின் அவலங்களையும் சிவாஜியின் உண்மை தோற்றத்தையும் விரிவாக பார்ப்போம் இந்த பதிவின் ஊடாக.

சாதி என்பது தொட்டுத் தொட்டு பற்றித் படரும் ஆற்றல் மிக்கது. அது தேச ஒற்றுமைக்கு பரம விரோதமானதாகும். சிவாஜியின் ‘இந்து ஸ்வாரஜ்’ வைதீகப் பழமையில் கட்டியெழுப்பப்பட்டதால் அதனினுடைய மரண அணுக்களும் அதற்குள்ளயே இருந்திருக்கிறது. சாதி வேற்றுமைகளையும் விரோதங்களையும் உயிரெனப் பாதுகாத்த இந்து கலகம் தோய்ந்த சமுதாயத்தின் ஆதிக்கத்தை இந்தியா முழுக்க நிலைநாட்டத்தான் சிவாஜி விரும்பினார். அது மணலைக் கயிறாகத் திரிப்பதற்கொப்பான நடைபெறாத விஷயமாகும். இந்தியாவை போன்ற ஒரு பெரும் கண்டத்தை முழுக்க சாதி வேற்றுமைகளாலும் மனிதநேய உணர்வின்மையும் சீரழிந்த ஒரு சமுதாயத்தின் கீழ்கொண்டுவர எத்தகைய மனித சக்தியாலும் முடியாது. இவ்வாறு சீரழிந்து செல்லரித்துப்போன ஒரு சமுதாய அமைப்பை உள்ளடக்கிய பிராமணக் கொடுங்கோன்மைக்கு இந்தியாவை அடிமை கொள்ளத் தான் பதினெட்டாவது நூற்றாண்டில் சிவாஜி என்கிற பிராமண அடிமையைக் கொண்டு முயற்சித்தனர்.

புரோகிதக் கொடுங்கோன்மையின் அநியாயங்களைச் சகிக்க முடியாமல் மக்கள் மூச்சுத்திணறித் துடித்து கொண்டிருந்தனர். அவர்களுடைய தேசிய அபிலாஷைகளும் கோட்பாடுகளும் மிதித்து நசுக்கப்பட்டன. சாதியின் அடிமைத்தனமும் அவமானமும் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. பேஷ்வாக்களும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் செல்வம் குவிக்க மக்களுடைய சொத்துக்களைப் பிழிந்தெடுத்தனர். சுதந்திர மனிதனின் அவனுடைய பாதுகாப்பின் கடைசி தொங்கு நூலும் அறுக்கப்பட்டது. உண்மையில் பிரிட்டீஷ்காரர்கள் பிராமண அடிமை சிவாஜியின் மராட்டிய தேசத்தை கைப்பற்றியது அவர்களுக்கு வரவேற்கத்தக்கதாக இருந்தது. “மராட்டிய மக்கள் எத்தகைய எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சோம்பலாக இருந்துவிட்டதால் மராட்டியத்தை கைப்பற்றுவது ஆங்கிலேயர்களுக்கு எளிதாக இருந்தது.

சிவாஜி சிறு வயதிலிருந்தே பிராமணர்களிடம்தான் வளர்ந்தார். தந்தை தன்னுடைய மேலாளரான பிராமணனிடம் சிவாஜியை ஒப்படைத்து எங்கோ போய்விட்டார். வைதிக மதத்திலும் விக்கிரக பூஜையிலும் ஆழந்த பக்தி நம்பிக்கைகொண்ட ஒரு சிறுவனாக சிவாஜி வளர்ந்தார். சிவாஜியிடம் அடிக்கடி பாவனிதேவியின் அருள் வெளிப்பட்டதாகவும் , சிவாஜிக்கு இடுக்கண்நேரும் போதெல்லாம் தேவியின் அறிவுரை கிடைத்துக் கொண்டிருந்ததாகவும் பல பேர் நம்பினர். இது சிவாஜியின் தலைமையைப் பலப்படுத்த புரோகிதர்கள் பரப்பிய கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

ஒரு நாட்டின் நிறுவனர் என்ற அருகதை பெற்ற சிவாஜி தன்னுடைய இளம்பருவத்துப் பிராமணத்தைக் கைவிட முடியாதவராக இருந்தார். எனவே தன்னையும் தன்னுடைய நாட்டையும் புரோகிதக் கொடுங்கோன்மையிடம் ஒப்படைத்துவிட்டார். நாட்டை பிராமணர்களுக்கோ கோவில்களுக்கோ காணிக்கையாக்குவது, அல்லது தானமாகக் கொடுப்பது, சாதி வேற்றுமையை ஒப்புக்கொண்டு சத்திரிய பதிவியை ஏற்பது, திவான்களும் ஆலோசகர்களுமாக இருப்பதற்கு பிராமணர்களுக்கு உரிமையிருக்கிறதென்று அங்கீகரிப்பது போன்றவை வாலி, வாமனன் காலத்திலிருந்து நவீன திருவிதாங்கூர் வரலாறுவரை பிராமண நுகத்தடியை சுமக்கும் சடங்குகளாக அங்கீகரிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

சிவாஜியின் குரு ராமதாசர் என்றழைக்கப்படும் பிராமணராவர். சிவாஜி தன்னுடைய நாட்டை குருவுக்குக் காணிக்கையாக்கிவிட்டு சனாதன தர்மத்தைப் பரிபாலிப்பதற்காகக் குருவிடமிருந்து அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் நாட்டைக் கோவிலில் இருக்கும் கடவுளுக்குச் சமர்ப்பித்து விட்டு, கடவுளின் தாசராக இருந்து ஆள்வதற்காக அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு நாட்டை ஒரு ‘ பிரம்மஸ்வம்’ அதாவது பிராமண ராஜ்யமாக நினைத்துக் கொண்டு ஆட்சி புரியும் பொறுப்பு தனக்கிருப்பதாக சிவாஜி ஒப்புதல் அளித்தார்.

சிவில்-மிலிடெரி ஆட்சியின் மிகமுக்கியப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர். மன்னரின் கீழ் எட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு அமைச்சரவையும் இருந்தது. சிவில் - மிலிடெரி ஆட்சியின் ஆகப்பெரிய உச்ச அதிகாரியும் பிரதம மந்திரியுமாய் (பேஷ்வா) பிராமணர்தான் இருந்தார். இந்தப் பதவி ஒரு குடும்பப் பரம்பரியுமை படைத்ததாக மாறி, சிவாஜியின் காலத்திற்குப் பிறகு பேஷ்வாக்கள் உண்மையான ஆட்சியாளர்காளயினர். சிவாஜியின் முடிசூட்டு விழா காலத்தில் இராணுவத் தலைமைத் தளபதியாத் தவிர மற்ற எல்லா அமைச்சர்களும் பிராமணர்களாக இருந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி சிவாஜிக்கு இருநூறு கோட்டைகளும் ஒவ்வொரு கோட்டையைச் சுற்றிகிராமங்களும் இருந்தன. இவை ஒவ்வொன்றின் சிவில் ஆட்சிக்கும் ஒரு பிராமண சுபேதாரும் ராணுவத் தளபதியாக ஒரு மராட்டிய ஹவில்தாரும் அமர்த்தப்பட்டிருந்தனர். மராமத்துப் பணிகள், கிடங்குகளின் மேற்பார்வைக்கு ஒரு பிரபுவும் இருந்தார். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏறத்தாழ இதைப் போலத்தான் ஆட்சி அமைப்பு இருந்தது. ஒவ்வொரு ராணுவக் குழுவின் தளபதியின் கீழும் பிராமணர்களும் பிரபுக்களும் அதைகாரிகளும் இருந்தனர். பெரிய ராணுவப் படைக்குழுக்களின் தலைவர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர்.

அமைச்சரவையில் மதவிஷயங்களுக்கான அமைச்சராக பண்டிட்ராவ் என்ற ஒரு பிராமணர் இருந்தார். சாதிச் சட்டங்களையும் ஆச்சாரங்களையும் நடைமுறைப்படுத்துவது, சிவில் - கிரிமினல் சட்டங்களை அமுலாக்குவது, அரண்மனையைச் சார்ந்த தர்மஸ்தாபனங்களை நிர்வகிப்பது போன்றவை பண்டிட் ராவின் பொறுப்பிலிருந்தன.

பிராமணர்கள் அனைவருக்கும் அவரவர்களின் புலமைக்கேற்ப ஆண்டுதோறும் காணிக்கையும் நன் கொடைகளும் அளிக்கப்பட்டன. வாழக்கைப்பாட்டிற்காக எந்தப் பிராமணனும் நாட்டைவிட்டு வெளியே செல்ல நேரவில்லை. இந்தத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலையான நிதிவைப்பிலிருந்து கிடைக்கும் ஆண்டுவருவாய் மட்டும், ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது ஐந்து லட்சம் ரூபாய் இருந்ததாம்.

தன்னுடைய அரசாட்சியை நிறுவ முப்பதாண்டுக்காலம் சிவாஜி இடைவிடாது போராடினார். ராஜபதவியையும் ஆட்சியையும் சட்டபூர்வமாக்க்கத் தன்னுடைய ‘பட்டாபிஷேகத்தை’ (முடிசூட்டுவிழா) இந்து சாத்திர முறைப்படி கெளரவமாக மேற்கொள்ள சிவாஜி விரும்பினார். சிவாஜியைப் பிராமண ஆதிக்கத்தை அங்கீகரிக்கும் ஒரு சத்திரியனாக மாற்ற பிராமணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துவிட்டது. நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் பதினோராயிரம் பிராமணப் பண்டிதர்களை அவர்களுடைய மனைவி மக்கள் உட்பட ஐம்பதாயிரம் பேரை தலைநகருக்கு வரவழைத்து, நான்கு மாதகாலம் அவர்களுக்கெல்லாம் அறுசுவை உணவளித்து உபசரித்ததோடு தங்கமும் பணமும் தானமாக அளித்தார் சிவாஜி. முக்கியப் புரோகிதரான கங்கபட்டனுக்கு மட்டும் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்ததாம். இந்தப் பட்டாபிஷேக மகோற்சவத்திற்கு ஏழுகோடி அக்காலத்திலேயே செலவழிக்கப்பட்டதாக கூறுகின்றனர் வரலாற்றுசிரியர்கள்.

சாத்திர முறைப்படியான பட்டாபிஷேகத்திற்கு ஒரு சத்திரியனுக்கு மட்டுமே உரிமையிருப்பதாக பிராமணர்கள் வாதாடினர். எனவே சிவாஜி உதயப்பூர் நாட்டின் ரஜபுத்திரப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று சாதிப்பதற்காக ஒரு வம்சபரம்பரைப் பட்டியலே தயாரிக்கப்பட்டது. அதற்குப் பிறகு புரோகிதர்களுக்கு ஒரு பெருந்தொகை கொடுத்து அவர்களிடமிருந்து உபநயன கர்மத் (பூணூல் அணிதல்) தையும் சிவாஜி ஏற்றுக் கொண்டார் இதைத் தவிர சிவாஜியின் போர்களில் பிராமணர்கள் கொல்லப்பட்டதற்குப் பாவ பரிகாரமாக பிராமணர்கள் எட்டாயிரம் ரூபாய் கோரிப் பெற்றனர். இந்த அளவுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்த பிறகும் தேவமந்திரம் செவிமடுக்க சிவாஜியைப் புரோகிதர்கள் அனுமதிக்கவில்லையென்பது மட்டுமின்றி, சிவாஜியை ஒரு சூத்திரன் என்று கூறிப் புறக்கணித்தனர்.

சிவாஜியின் அனைத்துப் போர்களிலும் பிரபுக்கள் மகத்தான சேவையாற்றினர். பிரபுக்களுக்குப் பாரம்பரியத்திற்கேற்ப இருந்த சாதிப் பதவியில் எத்தகைய இறக்கங்களையும் செய்யக் கூடாது என்று மன்னரின் கட்டளை இருந்தபோதிலும் பிராமணர்கள் பிரபுக்களை சாதியில் தரம் குறைப்பதற்காக புராணங்களில் இடைச் செருகலாக புதிய வாக்கியங்களை எழுதிச் சேர்த்தனர். பேஷ்வாக்களின் ஆட்சி துவங்கிய பிறகு பிரபுக்களுக்கு புதிய உத்தியோகங்கள் எதுவும் அளிக்கப்படாமல் அவர்களுடைய உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. மன்னர்களும் பேஷ்வாக்களும் சாஸ்திரங்களின் அனைத்து அநீதிகளையும் அதர்மங்களையும் ஈவிரக்கமின்றி அமுலாக்கினர். பேஷ்வா பூனாவில் ஒரு மதநீதிமன்றத்தை நிறுவி பிராமணர்களை நீதிபதிகளாக்கினார்.

“ இந்துச் சட்ட நியுணரான ஒரு சாஸ்திரி அதன் தலைமை நீதிபதியாக இருந்தார் மத அடிப்படையிலான,சாதி அடிப்படையிலான, எல்லா வழக்குகளையும் அந்த நீதிமன்றம் விசாரனை செய்து தீர்ப்பளித்தது. உடன்கட்டை ஏறுதலும் (சதி) பால்ய விவாகங்களும் முன்னை விட கூடுதலாக ஊக்குவிக்கப்பட்டன. இறந்துபோனவர்களின் மனைவி மட்டுமின்றி அவருடைய வைப்பாட்டிகளும் உடன்கட்டை ஏற வற்புறுத்தப்பட்டனர்.

சிவாஜி காலமான பிறகு பேஷ்வாவும் பிராமண நண்பர்களும் சேர்ந்து மூத்த புதல்வரைப் புறக்கணித்துவிட்டு இரண்டாவது புதல்வருக்கு மகுடம் சூட்டினர். மன்னர் பேஷ்வாவின் கட்டுப்பாட்டில் சொந்த அரண்மனையிலேயே ஒரு கைதியைப் போல் ஆகிவிட்டார். பேஷ்வாக்கள் ஆட்சி அதிகாரத்தைக் குடும்பச் சொத்தாக்கி கையப்படுத்தினர். இத்தகைய வஞ்சகச் செயல்கள் காரணமாக மக்களுக்குள் உறங்கிக் கிடந்த கோபமும் கலகமும் வெடித்துக் கிளம்பின. ரஜபுத்திரத் தலைவர்கள் அவரவர்களின் மாவட்டங்களில் சுதந்திரப் பிரகடனம் செய்தனர். அமைச்சரவை ஒழிந்துவிட்டது. சிவாஜி இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குள் அவருடைய பேரரசும் நொறுங்கிச் சிதைந்துவிட்டது.

சிவாஜியின் காலத்திலும் பேஷ்வாக்களின் காலத்திலும் மக்களை ஒரு நாட்டின் கீழ் ஒருங்கினைக்கவும் கல்வியில் முன்னேற்றவும் புத்திசாலித்தனமான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிராமண அதிகாரிகளின் பணப் பேராசையில் இருந்து  யாரும் தப்ப முடியவில்லை. அவர்கள் செல்வந்தர்களிடமிருந்து முடிந்த அளவுக்குப் பணத்தை ஈவிரக்கமின்றிப் பிழிந்தெடுத்தனர். கடைசி பேஷ்வா பிராமணரின் வீழ்ச்சியின் போது அவர் ஐந்து கோடிரூபாய் சம்பாதித்திருந்தார்.

References
Chapter XIII
Ranade's Rise of Maratha Power - 36,10,50,51
J.Sarkar's Sivaji and his times page : 431,430,435, 432,17,8,429,430, 431
C.A.kincaid and parasnis History of Maratha people Vol. 3 page 243,175,233.

Monday, 26 August 2013

“லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகு.

இந்துத்துவ ஊடக போய்ப் பிரச்சாரம்
வடக்கு கர்நாடகாவிலுள்ள பரிமாரு கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இப்பிரச்சினையைக் கையிலெடுத்த இந்து மதவெறி அமைப்புகள், “அனிதா, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் ஜிகாதி காதலர்களால் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டிருக்கலாம்”எனக் குற்றம் சுமத்தியதோடு, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், “அனிதா தீவிரவாதிகளின் சதிக்குப் பலியாகிவிட்டதாக’’ப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கின.  குருபுரா மடாதிபதி ராஜசேகரானந்தா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பல்வேறு இந்து மடங்களும் ஆதரவு தெரிவித்தன.
ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு, அசாதாரணமான மதக்கலவரச் சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நகர்ந்ததையடுத்து, அனிதா காணாமல் போன விவகாரத்தை விசாரிக்கத் தனி போலீசு படை அமைக்கப்பட்டது.  இரண்டே வாரத்தில் குற்றவாளியை மடக்கிப் பிடித்த போலீசார், “அனிதா, மோகன்குமார் என்ற பாலியல் வக்கிரம் பிடித்த கொலைகாரனால் கொல்லப்பட்ட” உண்மையைப் போட்டு உடைத்தனர்.  மேலும், மோகன்குமார் அனிதாவைப் போல 17 பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிக் கொன்ற பயங்கரமும் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.
எனினும், முசுலீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்து மதவெறி அமைப்புகளின் சதித்தனமான வெறியூட்டும் பிரச்சாரம் மட்டும் ஓய்ந்து விடவில்லை.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புதிய பரிசோதனைச் சாலையாகக் கருதப்படும் வடக்கு கர்நாடகாவிலும், கேரளாவிலும் “இந்து’மதத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் காணாமல் போனால், முசுலீம் இளைஞர்கள்தான் திருமண ஆசை காட்டி, மயக்கி, அப்பெண்களைக் கடத்திக் கொண்டு போவதாக ஆர்.எஸ்.எஸ்.கும்பல் முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரத்தை இம்மாநிலங்களில் நடத்தி வருகிறது.  இப்படி முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசை காட்டிக் கடத்தப்படும் பெண்கள், மதம் மாற்றப்படுவதோடு, தீவிரவாதப் பயிற்சி அளிக்கப்பட்டு இறக்கி விடப்படுவதாகவும்; போதை மருந்துகளையும் ஆயுதங்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் பீதியூட்டி வருகின்றன.
இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்து மதவெறி அமைப்பு, “வடக்கு கர்நாடகாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் மூன்று இந்துப் பெண்கள் முசுலீம் இளைஞர்களால் திருமண ஆசைகாட்டி கடத்தப்படுவதாகவும், அம்மாநிலத்தில் இதுவரை 30,000 பெண்கள் மதம் மாற்றப்பட்டிருப்பதாகவும்” கூறி வருகிறது.  எவ்வித ஆதாரமுமற்ற இந்த நச்சுப் பிரச்சாரத்தைப் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கி வெளியிட்டு வருகின்றன.  இந்த இந்து மதவெறி அமைப்பு முசுலீம் இளைஞர்களைப் “பாலியல் ஓநாய்கள்’என வசை பாடுவதோடு, இந்தக் கடத்தலைத் தடுக்க “ராணாராகினி’என்ற அமைப்பைக் கட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறது.
R.S.S ன் அசிங்க பிரச்சாரம்
இந்துப் பெண்களைத் திருமண ஆசைகாட்டி மயக்குவதற்காக முசுலீம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும்; இதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும்; இந்தப் பணத்தைக் கொண்டு அந்த இளைஞர்கள் விதவிதமாக ஆடை அணிந்துகொண்டு, விதவிதமான “பைக்’’குளில் சுற்றி வந்து இந்துப் பெண்களை மயக்குவதாகவும் கதைவிடும் இந்து மதவெறி அமைப்புகள், இந்தக் கட்டுக்கதைக்கு “காதல் புனிதப் போர்’(ஃணிதிஞு  ஒடிடச்ஞீ) என்ற திருநாமத்தையும் சூட்டியுள்ளன.  முசுலீம்கள் இதனை ஓர் இயக்கமாக நடத்தி வருவதாகவும், இந்தக் காதல் புனிதப் போருக்கும் அல்-காய்தாவுக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்து மதவெறி அமைப்புகள் திகிலூட்டி வருகின்றன.
ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வரும் தீவிரவாதிகளைக் கண்டு மட்டுமல்ல, கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் முசுலீம் இளைஞர்களைக் கண்டும் இந்துக்கள் பயப்பட வேண்டும் என்பதுதான் இந்த விஷமப் பிரச்சாரத்தின் நோக்கம்.  இந்து மதவெறி அமைப்புகள் முசுலீம் சமுதாயம் பற்றி பரப்பிவரும் பல்வேறு கட்டுக் கதைகள்-அவதூறுகளில் இதுவும் ஒன்று என அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த நச்சுப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நீதிமன்றமும் போலீசும் நடந்து வருகின்றன.
கேரளாவில் பதனம்திட்டா என்ற நகரில் உள்ள செயிண்ட் ஜான் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வந்த இரு மாணவிகள், ஷஹான் ஷா, சிராஜுதீன் என்ற இரு முசுலீம் இளைஞர்களைக் காதலித்து, வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்டனர். அந்த இரு மாணவிகளும் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட பிரச்சினை கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, அந்த இரு பெண்களின் விருப்பத்துக்கு மாறாக, கேரள உயர்நீதி மன்றம் அந்த இரண்டு திருமணங்களும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த இரு பெண்களையும் அவர்களது பெற்றோர்களோடு செல்லுமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின் அடுத்த வாய்தாவின் பொழுது அவ்விரு பெண்களும்,”தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக’பல்டியடித்து புதிய வாக்குமூலம் கொடுத்தனர். இந்த வாக்குமூலத்தைப் பிடித்துக்கொண்ட கேரள உயர்நீதி மன்றம், “லவ் ஜிகாத் என்றொரு அமைப்பு நிஜமாகவே உள்ளதா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்குத் தொடர்புண்டா?”என்பது உள்ளிட்ட எட்டு கேள்விகளை எழுப்பி, இது பற்றி தீர விசாரித்து அறிக்கை கொடுக்குமாறு கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.  இந்த எட்டு கேள்விகளுக்கும் இல்லை என்று பதிலளித்த கேரள போலீசார், மறுபுறமோ கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான கலப்புத் திருமணங்களும், மதமாற்றங்களும் நடந்து வருவதால், இது பற்றி இன்னும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தனர்.  இந்த இரண்டுங்கெட்டான் அறிக்கையைப் பிடித்துக் கொண்ட பத்திரிகைகள் “லவ் ஜிகாத்’பற்றி ஊதிப் பெருக்கிப் புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டன.
தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், “தனது மகள் சில்ஜாராஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ஆம் தேதி முதல் காணவில்லை; அவர் கேரளாவிலுள்ள மதரசா ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்; எனவே, தனது மகளைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்”எனக் கோரி கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இவ்வழக்கு விசாரணையின்பொழுது சில்ஜாராஜ்,”தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை; தான் விரும்பியே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டதாக” வாக்குமூலம் அளித்தார்.  எனினும் கர்நாடகா உயர்நீதி மன்றம் அப்பெண்ணிண் விருப்பத்துக்கு மாறாக, சில்ஜாராஜை அவரது பெற்றோரோடு போகுமாறு கட்டளையிட்டது.  சில்ஜாராஜ் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டுத் திருமணம் செய்து வைக்கப்பட்டாரா என்பதை ஆராய வேண்டிய நீதிமன்றம், அதனையும் தாண்டி, “இது தேசிய அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது”என்றெல்லாம் இவ்விவகாரத்தை ஊதிப்பெருக்கி, “லவ் ஜிகாத்’பற்றி அறிக்கை தருமாறு கர்நாடகா போலீசுக்கு உத்தரவிட்டது.
போலீசார் தமது அறிக்கையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் 404 பெண்கள் காணாமல் போயிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 332 பெண்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், 57 பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது காதலனோடு வெளியேறிப் போயிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.  மேலும் போலீசாரின் அறிக்கையில் காதலனோடு வெளியேறிப் போன பெண்களுள் ஒருசிலர் இந்து மதத்தைச் சேராதவர்கள்; அதே சமயம், இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்து வாலிபர்களோடு வெளியேறிப் போன வழக்குகளும் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகா போலீசாரின் இந்த அறிக்கை “லவ் ஜிகாத்’என்ற இந்து மதவெறிக் கும்பலின் நச்சுப் பிரச்சாரத்தை மறுத்துவிட்ட போதிலும், கர்நாடகா உயர்நீதி மன்றம் சில்ஜாராஜைத் தனது காதல் கணவனோடு போவதற்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  கர்நாடகா பா.ஜ.க. அரசாங்கமோ லவ் ஜிகாத் பற்றி விசாரிக்குமாறு சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பிரச்சாரத்தின் சூடு தணியாமல் பார்த்துக் கொள்கிறது.
உத்திரப் பிரதேச மாநில அரசுக்கும் லதா சிங் என்பவருக்கும் இடையே உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கொன்றில், “வயதுக்கு வந்த ஒருவர் தனக்கு விருப்பமானவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை” ஆதரித்து அந்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், அத்தீர்ப்புக்கு எதிராகவே கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் வழக்குரைஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.  மேலும், அந்நீதிமன்றங்கள் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிநபர் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த விவகாரத்தில் கேரளா மற்றும் கர்நாடகா உயர்நீதி மன்றங்களின் நடத்தை “நீதியை” நிலைநாட்டப் பயன்பட்டதைவிட, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனமான நச்சுப் பிரச்சாரத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்து போனதுதான் உண்மை.  வடக்கு கர்நாடகாவிலுள்ள கல்லூரிகளில் பயிலும் இந்து மற்றும் முசுலீம் மாணவர்கள் வகுப்பறைகளில் தனித்தனியாக அமரும் அளவிற்கு, அப்பகுதியில்  மதப்பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்களின் ஆர்.எஸ்.எஸ். சார்பான நடத்தை எத்தகைய பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்?  இந்த விளம்பரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கும்பல், மதமாற்றத் தடைச் சட்டம் போல், காதல் திருமணத் தடைச் சட்டம், கலப்புத் திருமணத் தடைச் சட்டம் போன்றவற்றையும் கொண்டுவர வேண்டும் எனக் கோரினால்கூட ஆச்சரியப்பட முடியாது!

Thursday, 2 May 2013

ஆபாச படங்கள் அசிங்கமான ஆபத்து

க‌மலேஷ் வஸ்வானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் போர்னோகிராபியை (பாலியல் காட்சிகள்) இணையத்தில் பார்ப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும், மீறி பார்ப்பவர்களை பிணையில் வர இயலாத பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இணையத்தின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான பாலியல் உறவுகளுக்காக நிற்பதாக சொல்லிக் கொள்ளும் இணையதளப் போராளிகள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்க்கத் துவங்கியுள்ளனர். ஆனால் கமலேஷின் கோரிக்கை, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு போர்னோ ஒரு முக்கிய காரணம் என்பதை வலியுறுத்துகிறது. போர்னோ என்பது கருத்து சுதந்திரமா இல்லை கருத்துருவாக்கமா என்ற கேள்வியை பலரும் பரிசீலிப்பதில்லை. தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ அறிவுஜீவிகள் விதந்தோதும் கட்டற்ற சுதந்திரத்தின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்க வேண்டியதாகிறது.

இப்படி சொல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர். இரண்டாவது 2012 இல் உலகிலேயே கூகுள் தேடுபொறியில் அதிகமுறை போர்ன் என்ற வார்த்தையை தேடியது டெல்லியில்தானாம். அதற்கு இணையாக தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் பாலியல் வல்லுறவுக் குற்றம் கடந்த ஆண்டுதான் அதிகமாம். இது பிற ஆண்டுகளைக் காட்டிலும் சற்றேறக்குறைய இருமடங்கு அதிகம்.


இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பொது இடங்களில் இது போன்ற இணைய தளங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் கூடுகின்ற இடங்களில் ஆபாசப் படங்களை வைக்க தடை உள்ளது. காரணம் கூகுள் இணைய தளத்தில் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் அல்லது சிறுமி போர்ன் என்ற வார்த்தையை போட்டுத் தேடினால் கிடைப்பது பெரும்பாலும் காடு அல்லது வயல்வெளியில் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாகும் பெண்ணின் கதைதான். பாலியல் உறவு என்பதே அந்த பதின்ம வயது இளைஞர்களிடம் வன்முறை கலந்த இன்பமாகத்தான் பதிவாகிறது. சில காலம் கழித்து இதுவெல்லாம் சாதாரணம் என்ற அளவுக்கு புரிந்துகொள்ளப் பழகுகிறார்கள். ஊடகங்களும், சினிமாவும் சந்தையின் தேவைக்கேற்ப பெண்களை ஒரு ஸ்டீரியோ டைப் இல் பார்க்க சொல்லித் தருவதால் இளைஞர்களுக்கு பாலியல் வன்முறை சாதாரண நிகழ்வாக மாறுவது பெரிய விசயமாகப் படுவதேயில்லை.
போர்னோகிராபி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு இணங்க நிஜ உலகில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வயதும் கணிசமாக குறைந்துள்ளது. ஆகவே ஃபோர்னோ தளங்களை சரோஜாதேவி புத்தகத்தின் ஈ-பதிப்பு என்று குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அமெரிக்க நீதித்துறை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து செய்யும் குழுவான பாலியல் வல்லுறவுக் குற்றம் 1994-98 இல் 7 சதவீதமாக இருந்து, 2005-10 இல் 10% ஆக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் இப்படி வல்லுறவுக்குள்ளாக்கிய காட்சியை பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் ஏற்றுவது இளைஞர்களின் ஆண்மைக்கு அடையாளமாக மாறி உள்ளது. பெண்களை போகப்பொருளாகப் பார்ப்பது, பாலியல் உறவுக்கான கருவி என ஸ்டீரியோடைப்பாக பார்க்கப் பழகிய இவர்களை அடுத்த கட்டமாக அந்த அரைத்த மாவில் கல் தோசை, மசாலா தோசை, பொடி தோசை என சுட வைக்கும் வேலையை சோசியல் மீடியா செய்யத் தூண்டுகிறது. ஏற்கெனவே உள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பும், வளர்ந்து வரும் நுகர்வு மோகமும் ஒரே பெண்ணிடம் விதவிதமான உறவு என வெரைட்டி காண்பிக்கிறது. தன்னைப் போன்ற ஒரு சக பயணி என்ற உணர்வு இந்த அமெரிக்க பாணி இளைஞனிடம் சுட்டுப்போட்டாலும் வராது.
க‌டந்த ஆண்டு அமெரிக்க நாட்டின் ஓகியோவிலுள்ள ஸ்டூபன்வில் உயர்தரப் பள்ளியில் நடந்த குழுவான பாலியல் வன்முறையில் பல மாணவர்கள் இணைந்து ஒரு மாணவியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து போட்டனர். இக்குற்றத்தில் சாட்சியாக இருந்த மாணவர்கள் இதனை ஒரு வல்லுறவு என்று நினைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஹ்தா பார்த்தன்ஸ் என்ற அமெரிக்க மாண
வியும், ஆட்ரே போட்ஸ் என்ற கனடா மாணவியும் இதே போன்ற நிகழ்வால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போர்னோ தளங்களில் உண்மையான பாலியல் காட்சி என்று போட்டால்தான் மவுசு அதிகம். அது அமெரிக்காவில் தோழிகளை படம் பிடிப்பதாக இருந்தால், இந்தியா போன்ற நாடுகளில் தன்னிடம் வேலை பார்க்கும் பதின்ம வயதுப் பெண்களை மிரட்டி படம் பிடிப்பதாக உள்ளது. இந்த இடத்தில்தான் சமூக தளமும், போர்னோ தளமும் பிரியும் கோடு அழியத் துவங்குகிறது. போர்னோ தளத்தில் பார்த்த போது தெரிந்த கற்பனையான பக்கத்து வீட்டு ஆண்டி இப்போது சக மாணவியாக, உடன் வேலை செய்பவராக மாறத் துவங்குகிறது. நேரடியாக போர்னோ தளத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியாவிட்டாலும், இத்தளங்களை பார்ப்பதன் அதீதம் காரணமாக நிறைய மணமுறிவு, விவாகரத்துகள் நடந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
‘மூன்றாண்டு வரை தண்டனை தருமளவுக்கு ஏதேனும் சட்டம் இருக்கிறதா? என்ன வரைமுறைப்படுத்த உள்ளீர்கள்’ என்றெல்லாம் கேட்டு மத்திய அரசின் அமைச்சகங்கள் சிலவற்றுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது நீதிமன்றம். ஏப் 29 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ‘போர்னோ பார்ப்பதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்’ என்பது போன்ற சட்டங்கள் போடப்படலாம். சினிமாவுக்கு இருப்பது போல சென்சார் போடுவது சாத்தியமில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் விதிப்பார்களா? எனத் தெரியவில்லை. ஆனால் போர்னோ தளங்கள் வெறும் கள்ளக் குழந்தை மட்டுமல்ல. மனித சமூகம் பண்பட எடுத்துக்கொண்ட பல நூற்றாண்டு காலத்தை பின்னோக்கி செலுத்த சில நிமிடங்கள் மட்டுமே அதற்கு தேவைப்படுகிறது. நிழலை நிஜமாக்க இளைஞர்கள் முந்துகிறார்கள். பாலியல் சுதந்திரம், எழுத சுதந்திரம் என கட்டற்ற சுதந்திரம் கடைசியில் பெண்களது உயிரோடும், சமத்துவமாகவும், சுய மானத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.
நன்றி மூலக்கட்டுரை :http://www.thehindu.com/opinion/op-ed/freedom-that-must-have-limits/article4663661.ece
நன்றி: வினவு 

Tuesday, 9 April 2013

சம்பூகன் யார்??

இந்து தர்மப்படி (!?) இராமன் ஆட்சி செய்கிற காலத்தில் சம்பூகன் எனும் சூத்திரன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான். அப்பொழுது வேதம்தான் பாடம். அதை படிக்கவோ, காதில் கேட்கவோ சூத்திரருக்கு உரிமையில்லை. அதனால்தான் பார்ப்பான் அழுதுக் கொண்டே ராமனை நோக்கி வருகிறான். ராமனைப் பார்த்து ராமா உன் ஆட்சியில் அக்கிரமம் நடக்கிறது என்றும் அக்ரகாரத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அதற்குக் காரணம் சம்பூகன் என்ற தாழ்த்தப்பட்டவன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள்.

ராமன் காட்டிற்கு சம்பூகனிடம் சென்று தனது வலது கைக்கு ஆணையிடுகிறான். அவன் தலையை வெட்டு என்கிறான். அவன் தலை வெட்டப்படுகிறது. அவன் உயிர் பிரிந்தது. உடனே அந்த பார்ப்பனக் குழந்தை உயிர்த்தெழுந்ததாம்.

இராமன் சம்பூகன் என்பவனை கொலை செய்தான். காரணம் அவன் தவம் செய்தான். அவன் தவம் செய்வது அவனுக்கு தடை செய்யப்பட்டது அதற்கு காரணம் அவன் சூத்திரன். ( உத்திர காண்டம், அத்தியாயம் 76 )

ராமன் பார்ப்பன ஆதிக்கத்தின் அடையாளம் என்றால்
சம்பூகன் பார்ப்பன எதிர்ப்பின் அடையாளம்.

Thursday, 6 December 2012

கொல்லப்படும் சம்பூகர்கள்


கற்றுக் கொள்ஒன்று திரள்போராடு என்பதுதான் உங்களுக்கு எனது இறுதி அறிவுரை. செல்வத்துக்காகவோ அல்லது அதிகாரத்துக்காகவோ இல்லை நம்முடைய போராட்டம்அது சுதந்திரத்துக்கான போராட்டம். அது மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போராட்டம்”– பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
‘சதாராவில் இருக்கும் தனது பள்ளியில் தான் தண்ணீர் குடிக்க முடியாது’ என்பதைப் பீம் தனது 10 வது வயதில் 1901-ஆம் ஆண்டு உணர்ந்தார். இந்தியாவின் பெரும்பாலான தலித்துகளைப் போலவே அவருக்கும் ‘வெளிநாட்டில் ரயில் வண்டியிலிருந்து வெளியில் தள்ளப்படுவதன் மூலம்’ இனப்பாகுபாட்டின் கசப்புச் சுவை தெரிய வேண்டியிருக்கவில்லை. இருந்தாலும், கல்விக்கான தாகம் அம்பேத்கரை தொடர்ந்து செலுத்தியது. கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் முனைவர் பட்டம் பெற்று 1918-இல் நாடு திரும்பிய பிறகு மீண்டும் அவரது தீண்டாமை நினைவூட்டப்பட்டது. பரோடா மகாராஜாவின் ஆதரவு, சிறந்த கல்வி, பணம், நல்ல உடைகள் எதுவும் ‘தாகத்தை மதிப்போடு தணித்துக் கொள்ளவோ, நல்ல குடியிருப்பைத் தேடவோ’ அவருக்கு உதவி செய்யவில்லை. ஒரு சில சாதிகள் அடிப்படையிலேயே தாழ்ந்தவை என்று நம்பிய அமைப்பின் நஞ்சை முறிக்க அவர் இட ஒதுக்கீடு என்ற மாற்று மருந்தைப் பரிந்துரைத்தார். கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்ற சீர்திருத்த சோசலிச முழக்கத்தை அவர் தலித்துகளுக்கு வழங்கினார்.
இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது மனித ஆளுமையை மீட்டுக் கொள்வதற்கான போராட்டம். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இன்னமும் இயல்பாக மறுக்கப்பட்டு வரும் மனித உரிமைகளுக்கான போராட்டம்.
கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி அன்று, அனில் குமார் மீனா என்ற பழங்குடி இன மாணவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்  (எய்ம்ஸ்- AIIMS)  உள்ள அவரது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தி மீடியத்தில் படித்த அவர், இராஜஸ்தானின் பரானைச் சேர்ந்த விவசாயியின் மகன். 12-ஆம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து, எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது விடுதி அறையில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்த பால் முகுந்த் பாரதியின் அடிச்சுவட்டை அனில் குமார் மீனாவும் பின்பற்றியிருக்கிறார்.
அனில் குமார் மீனாவின் தற்கொலைக்குப் பிறகு எய்ம்ஸ் இயக்குனரின் வீட்டுக்கு வெளியில் மார்ச் 4, 2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்
இந்திய பள்ளிகளில் நிகழும் வாழ்வும் சாவும்
 • மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 -  இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை
 • அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு
 • ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்
 • செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்
 • பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 -  முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
 • ஜி. சுமன், ஜனவரி 2, 2009  – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்
 • அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்
 • டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009  – முதலாம் ஆண்டு பி.டெக்,  சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்
 • எஸ். அமராவதி, நவ 4, 2009  – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர்,  சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்
 • பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்
 • புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010  – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு
 • சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 -  இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ
 • ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 -  இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
 • மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
 • ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு,  விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்
 • மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி
 • லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி
 • அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி
(தகவல்: இன்சைட் அறக்கட்டளை)
ஆனால், பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.
பாகுபாடு பாராட்டும் இந்தக் கல்வி அமைப்பில் தாக்குப் பிடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உடன் பிறந்தவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை செய்து ஒருவரின் கனவையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற உதவ வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பகுதி குழந்தைகள் வீட்டு வேலை செய்பவர்களாக, குழந்தைத் தொழிலாளர்களாக அல்லது பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.
ஒரு தலித் பெண்ணுக்கான சூழ்நிலை இன்னும் மோசமாக இருக்கின்றது. மகாராஷ்டிராவின் காயர்லஞ்சியில்17 வயது பிரியங்கா போட்மாங்கே படித்து மதிப்பான வாழ்க்கையைத் தேடினார் என்ற உண்மை ஆதிக்க நிலவுடைமைச் சாதிகளின் கோபத்தைத் தூண்டியது. அவரும் அவரது தாய் சுரேகாவும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரது சகோதரர்கள் வெட்டி வீசப்பட்டார்கள்.
இது போன்ற கடக்க முடியாத சாத்தியங்களை எதிர்த்து நின்று உயர் கல்வி நிறுவனங்களைப் போய்ச் சேரும் தலித்துகளை – புள்ளிவிபரங்களின் படி நூற்றில் 2 தலித்துகள் இதைச் சாதிக்கின்றனர் – ஆசிரியர்களின் மற்றும் சக மாணவர்களின் குத்தலும், கிண்டலும் வரவேற்கின்றன. கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படாவிட்டால் உணர்வு ரீதியாக அவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.
டந்த பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கருப்பின மாணவர்கள் குறைவாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது பற்றி பிரிட்டிஷ் ஊடகங்களில் ஒரு விவாதம் நடந்தது. வேறு விசயங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், பிரதமர் டேவிட் காமரூன் இந்த விவாதத்தில் தலையிட்டு, அவர் படித்த ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் கருப்பின மற்றும் சிறுபான்மைக் குழுக்களிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருப்பது “கேவலமானது” என்று சொன்னார்.
“2010 இல் பிரிட்டனின் இரண்டு பழமையான பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களில் நூற்றில் ஒரு பங்கை விடக் குறைவானர்கள்தான் கருப்பு இனத்தினர். ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்ட 2617 பேரில் 20 பேர் கருப்பு இன மாணவர்கள். இது 2009-இன் 29 பேரிலிருந்து குறைந்திருந்தது” என்று டெலிகிராப் கூறியது.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லேமி, தகவல் பெறும் உரிமையின் மூலம் தரவுகளை சேகரித்து இந்த “ஆக்ஸ்பிரிட்ஜ் வெறுமையை” பற்றி குறைபட்டுக் கொண்டு, தி கார்டியனில் ஒரு கட்டுரை எழுதினார்.
பிரிட்டனில் நடக்கும் இந்த விவாதம், இந்தியாவில் நிலவும் பேரமைதிக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. தலித் மாணவர்களுக்கு எதிராக அக மதிப்பீட்டில் (குறிப்பாக செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளில்) பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவர்கள் தங்கும் விடுதிகள், உணவு அறைகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பிரித்து வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து 2006-இல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சுகதேவ் தோரட்டின் தலைமையிலான மூன்று பேர் குழு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றி விசாரணை நடத்தியது. 77 பக்க தோரட் அறிக்கை நிர்வாகத்தைப் பல முனைகளிலும் குற்றஞ்சாட்டி, பரிந்துரைகளை முன் வைத்தது. ஆனால் அந்த அறிக்கை முன் முடிவுகளுடன் தயாரிக்கப்பட்டது என்று ஒதுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் ஒன்று இதோ.
ஏப்ரல் 2006-இல், உமா காந்த் என்ற தலித் எய்ம்ஸ் மாணவர், தான் தங்கியிருந்த அறை எண் 45-இன் கதவில் “இந்தப் பகுதியிலிருந்து தொலைந்து போ” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார். அப்படி எழுதிய ரவுடிகள் ஒரு தடவை உமாகாந்த் அறைக்குள் இருக்கும்போது வெளியிலிருந்து கதவைப் பூட்டி விட்டனர். இது பற்றி உமாகாந்த் ஒரு முறையான புகார் பதிவு செய்தார். என்ன நடந்தது?. மாணவர்களுக்கு “அவர்களது கடமைகள், கட்டுப்பாட்டை பின்பற்றுதல், ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடன் பழகுதல் போன்றவை நினைவூட்டப்பட்டு அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தபட்டனர்”. குற்றவாளிகள் தலித் மாணவருடன் கைகுலுக்க வைக்கப்பட்டனர்.
அவர்களோ அதற்குப் பிறகு உமாகாந்தைப் பிடித்து உதைத்து, ஒதுக்கப்பட்ட இன்னொரு பகுதிக்கு அவரை அறை மாற்றிக்கொள்ள வைத்தனர். அந்தப் பகுதிதான் எல்லா ‘ஷெட்யூல்களும்’ இருக்க வேண்டிய இடம். தெரிந்தே நடந்த எய்ம்ஸ் நிர்வாகத்தின் அலட்சியங்கள் இப்படி இருக்கும் போது அனில் மீனா, பால் முகுந்ந் பாரதி இவர்களின் மரணம் கொலைகளாகக் கருதப்பட வேண்டாமா?
இத்தகைய கொலைகள் எய்ம்சில் மட்டும் நடக்கவில்லை. ஆகஸ்ட் 26, 2007 இல், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 21 வயதான அஜய் ஸ்ரீ சந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பொதுப்பிரிவில் ஐ.ஐ.எஸ்.சி.க்கு தேர்வு பெற்றாலும், ஒதுக்கப்பட்ட பிரிவில்தான் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு நரகம் ஆரம்பித்தது. ஏதோ ஒரு வகைத் தண்டனையாக ஒரே சோதனையை மூன்றாவது முறை திரும்பச் செய்து கொண்டிருந்த போது ஆய்வகத்தில் இருந்த சூழலை அவர் தனது நாட்குறிப்பில் விவரிக்கிறார்.
“நேரம் 11.45 முற்பகல். நான் தவறான ஆய்வகத்தில் இருக்கிறேன். அல்லது இந்த ஆய்வகம் எனக்கு உரியது இல்லை. அந்தக் கண்கள், அவை என்னைப் பயமுறுத்துகின்றன. அவ்வளவு உயர்வு/தாழ்வு மனப்பான்மையுடன் என்னைப் பார்க்கின்றன”.
அனில் மீனா ‘மன அழுத்தத்தால்’ இறந்தார் என்று எய்ம்ஸ் சொல்ல, அஜய் சந்திரா படிப்புச் சுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்தார் என்று ஐ.ஐ.எஸ்.சி முடிவு செய்தது.


கடந்த சில ஆண்டுகளாக இட ஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவுவதற்காக சில பலவீனமான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கில திறமைகளுக்கும் விரைவு பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் உயர்தர அறிவியல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிலையங்களில் தாக்குப் பிடிக்க உதவிகள் வழங்கப்படுகின்றன. கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூக மாற்றத்துக்கான ஆய்வு மற்றும் கல்விக்கான மையம், தலித்/பழங்குடி மாணவர்களுக்கு ஒரு வார காலத்துக்கான ‘சுய முன்னேற்ற’ நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகங்களில் நடத்த முன்வருகின்றது. அதன் மூலம் ஐ.ஐ.எம்.களிலும் ஐ.ஐ.டி.களிலும் அவர்கள் பொருந்திப் போக உதவி செய்கிறது. ஐ.ஐ.டி தில்லியில் சென்ற ஆண்டு அத்தகைய பயிற்சி வகுப்பை அந்நிறுவனம் நடத்தியது.
ஆனால் இந்தக் கல்வி நிலையங்களின் பெரும்பகுதியினரான ஆதிக்க சாதி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஏகலைவர்களின் பெருவிரல்களை வெட்டி எறிய வலியுறுத்தும் துரோணாச்சாரியர்களையும், அர்ஜூனன்களையும் மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தேவையில்லை, பாகுபாடு காட்டுபவர்களுக்குத்தான் உதவி தேவை.
எய்ம்ஸ், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி-களில் கொல்லப்பட்ட தலித்/பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கையில், பாதி அளவு ஹார்வர்டு அல்லது ஆக்ஸ்போர்டில் கறுப்பின மாணவர்கள் கொல்லப்பட்டால் என்னவிதமான விளைவுகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
குப்தா அல்லது ஷர்மா என்ற உயர்சாதிப் பெயர்களுடைய இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது அது இனவெறி என்று பேசப்படுகின்றது. அது நாடுகளுக்கிடையேயான பிரச்சனையாகக் கூட ஆகிறது. தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் இந்திய வளாகங்களில் மரணத்துக்குத் துரத்தப்படும் போது ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. தலித்துகளுக்கு எதிரான இத்தகைய முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?  இட ஒதுக்கீடுகளின் அடிப்படையையே எதிர்க்கும் காழ்ப்புணர்வு நிறைந்த வாதங்களை உறுதிப்படுத்துவதற்குக் கூட இந்த இறப்புகள் பயன்படுத்தப்படுவது எவ்வளவு கேவலமானது?
2003-இன் ஹிட் திரைப்படம் முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தின் கதாநாயகன் முரளி பிரசாத் ஷர்மா என்ற பிராமண சாதிப் பெயரை பெருமையுடன் சுமக்கிறான். பணம் பறித்தல், மிரட்டுதல், ஆள் கடத்தல் போன்ற தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ரவுடியான முரளி மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். எம்பிபிஎஸ் தேர்விலும் ஏமாற்றி தேர்ச்சி பெற முயற்சிக்கிறான். உணர்ச்சியற்ற அமைப்புக்கு எதிலான கலகக் குரலாக அவன் நேசிக்கப்படவும், போற்றப்படவும் செய்தான். முன்னாபாயின் நகைச்சுவையும் செய்தியும் இவ்வளவு பிரபலமானது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் அவற்றைச் செய்தது ஒரு ஷர்மா.
அனில் மீனாவும், பால் முகுந்த் பாரதியும் முரளி பிரசாத் ஷர்மாவைப் போல் இல்லாமல் கடினமாக உழைத்து எய்ம்சுக்குப் போய்ச் சேர்ந்தனர், ஏமாற்றிச் சேரவில்லை. அவர்களின் மரணத்தில் பல லட்சம் தலித், பழங்குடி மக்களின் நம்பிக்கைகள் நசுக்கப்பட்டன. அஜய் சந்திரா, கடுமையான தீர்ப்பு சொல்லும் கண்கள் அவரை பயமுறுத்தியதை பற்றிப் பேசுகிறார். அஜ்ய்கள், அனில்கள், பால் முகுந்த்களின் கண்களை அவற்றுக்கு உரிய மரியாதையுடன் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. அதுவரை இந்த மரணங்கள் நம்மை விட்டுவிடப் போவதில்லை.