Friday, 27 September 2013

குஜராத்தின் உண்மை நிலை இதுதான்- ரகுராம் ராஜன் குழு அறிவிப்பு !

2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான  ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி இந்து)
சரி, அப்படியானால் மோடியின் குஜராத்? இந்த ஆய்வு “குஜராத் மாடலையும்”, “வைபரண்ட் குஜராத்தையும்” உலகமே தரிசிக்கும்படி செய்துள்ளது. குஜராத்தின் ஓட்டைகளை மறைத்து வளர்ச்சியை நிலைநாட்டி விடலாம் என்று ஊடகங்களும் பேஸ்புக் போராளிகளும் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் இது போன்ற ஆய்வுகள் அவர்களை சந்தி சிரிக்க வைத்து விடுகின்றன.
பீகார் முதல்வர் நித்திஷ்குமார் தனது மாநிலம் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அதற்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த கோரிக்கையை எழுப்பின. கடந்த மே மாதத்தில் பின் தங்கிய மாநிலங்களை கண்டறிவதற்கான அளவீட்டு முறையை பரிந்துரை செய்ய மத்திய அரசு ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தது.
இது வரை இருந்து வந்த கட்கில்-முகர்ஜி ஃபார்முலாவில் மக்கள் தொகையை முதன்மையாகவும், தனிநபர் வருமானம், கல்வியறிவு போன்றவற்றை அடுத்தபடியாகவும் வைத்து மாநிலங்களின் முன்னேற்றம் அளவிடப்பட்டது. இந்த முறைக்கு மாற்றாக பின்வரும் 10 காரணிகளை சம முக்கியத்துவமுடையதாக கொண்டு மாநிலங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்திருக்கிறது.
தனிநபர் மாத நுகர்வு
கல்வி
மருத்துவம், சுகாதாரம்
வீட்டு உபயோக பொருட்கள்
வறுமை வீதம்
பெண்களின் கல்வியறிவு
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சதவீதம்
நகர மயமாக்கல் வீதம்
நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
சாலை இணைப்புகள்

இவற்றைக் கொண்டு மாநிலங்கள் 0 முதல் 1 வரை இலக்கமிட்டு வரிசைப்படுத்தப்பட்டன. 0.6-க்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட 10 மாநிலங்கள் மிகப் பின் தங்கிய மாநிலங்கள் என்றும் 0.4-க்கும் 0.6-க்கும் இடையில் மதிப்பீடு செய்யப்பட்ட 11 மாநிலங்கள் பின்தங்கியவை என்றும் 0.4-க்கு குறைவாக மதிப்பீடு பெற்ற 7 மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்கள் என்றும் கருதப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்தியிருக்கிறது.
மாநிலங்கள் பட்டியல்
படம் : நன்றி தி இந்து.
இதன்படி பின் தங்கியிருப்பதற்கான குறியீட்டில் குறைவான புள்ளிகள் பெற்று கோவா (0.045) மிக அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், கேரளா (0.095) இரண்டாம் இட்த்திலும், தமிழ்நாடு (0.341) மூன்றாம் இடத்திலும், மிகவும் பின் தங்கிய மாநிலமாக ஓடிசா (0.798) கடைசி இடத்திலும் உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் பின் தங்கியிருப்பதில் 0.491 மதிப்பீடு பெற்று மாநிலங்களின் வரிசையில் 12-வது இடத்தில் உள்ளது. இது வளர்ச்சி குறைந்த மாநிலம் என்ற பிரிவில் வருகிறது. இந்த பிரிவில் வரும் மற்ற மாநிலங்கள் மேற்கு வங்காளம், நாகாலாந்து, ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் இமாச்சல பிரதேசம்.
இது போன்ற புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தை அம்பலப் படுத்தினாலும் மக்களை முட்டாளாக, மூடர்களாக கருதி 12 ஆவது இடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தை முதலாவது இடம், முன்னோடி என்று ஊடகங்கள் முன்னிறுத்தி வருகின்றன.
வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதிலோ இல்லை மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பிடுவதிலோ உள்ள இத்தகைய முதலாளித்துவ பொருளாதார ஆய்வுமுறைகளை நாங்கள் ஏற்பதில்லை. வினவிலும் அவற்றை விளக்கி பல கட்டுரைகள் வந்திருக்கின்றன. ஆனால் இந்துமதவெறியர்களும், பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட மோடி ரசிகர்களும் இத்தகைய ஆய்வு முறைகளைக் கொண்டுதான் குஜராத்தில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் அந்த பிரச்சாரங்களுக்குரிய ஒரிஜினல் ஆவணங்களைப் பார்த்தாலே குஜராத் பின்தங்கியிருப்பது தெரியவரும். அந்த வரிசையில் இது மற்றுமொரு சாட்சி.
இதனால்தான் திருச்சி பொதுக்கூட்டத்திலும் குஜராத்தின் சாதனை என்று ஒரு வரியைக்கூட மோடி குறிப்பிடவில்லை. மோடி பொய் சொல்வதில் அஞ்சுபவர் இல்லை என்றாலும் அவரது பொய்கள் தோலுரிக்கப்பட்ட நிலையில் அந்த டாபிக்கே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு, பயங்கரவாதம் பக்கம் தாவி விட்டார். ஏனெனில் ஒரு பயங்கரவாதிதானே பயங்கரவாதத்தை குறித்து ஆழமாக பேச முடியும்!
மேலும் படிக்க

No comments:

Post a Comment