Thursday 2 May 2013

ஆபாச படங்கள் அசிங்கமான ஆபத்து

க‌மலேஷ் வஸ்வானி என்பவர் உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதில் போர்னோகிராபியை (பாலியல் காட்சிகள்) இணையத்தில் பார்ப்பதை தடைசெய்ய வேண்டும் என்றும், மீறி பார்ப்பவர்களை பிணையில் வர இயலாத பிரிவுகளில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இணையத்தின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான பாலியல் உறவுகளுக்காக நிற்பதாக சொல்லிக் கொள்ளும் இணையதளப் போராளிகள் இந்த கோரிக்கையை கடுமையாக எதிர்க்கத் துவங்கியுள்ளனர். ஆனால் கமலேஷின் கோரிக்கை, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு போர்னோ ஒரு முக்கிய காரணம் என்பதை வலியுறுத்துகிறது. போர்னோ என்பது கருத்து சுதந்திரமா இல்லை கருத்துருவாக்கமா என்ற கேள்வியை பலரும் பரிசீலிப்பதில்லை. தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ அறிவுஜீவிகள் விதந்தோதும் கட்டற்ற சுதந்திரத்தின் அயோக்கியத்தனத்தை தோலுரிக்க வேண்டியதாகிறது.

இப்படி சொல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. சமீபத்தில் டெல்லியில் 5 வயது சிறுமியை கொடூர பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய இருவர் அதற்கு சற்று முன்னர்தான் இணையத்தில் போர்னோ தளத்தை பார்வையிட்டுள்ளனர். இரண்டாவது 2012 இல் உலகிலேயே கூகுள் தேடுபொறியில் அதிகமுறை போர்ன் என்ற வார்த்தையை தேடியது டெல்லியில்தானாம். அதற்கு இணையாக தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் பாலியல் வல்லுறவுக் குற்றம் கடந்த ஆண்டுதான் அதிகமாம். இது பிற ஆண்டுகளைக் காட்டிலும் சற்றேறக்குறைய இருமடங்கு அதிகம்.


இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பொது இடங்களில் இது போன்ற இணைய தளங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள் கூடுகின்ற இடங்களில் ஆபாசப் படங்களை வைக்க தடை உள்ளது. காரணம் கூகுள் இணைய தளத்தில் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் அல்லது சிறுமி போர்ன் என்ற வார்த்தையை போட்டுத் தேடினால் கிடைப்பது பெரும்பாலும் காடு அல்லது வயல்வெளியில் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாகும் பெண்ணின் கதைதான். பாலியல் உறவு என்பதே அந்த பதின்ம வயது இளைஞர்களிடம் வன்முறை கலந்த இன்பமாகத்தான் பதிவாகிறது. சில காலம் கழித்து இதுவெல்லாம் சாதாரணம் என்ற அளவுக்கு புரிந்துகொள்ளப் பழகுகிறார்கள். ஊடகங்களும், சினிமாவும் சந்தையின் தேவைக்கேற்ப பெண்களை ஒரு ஸ்டீரியோ டைப் இல் பார்க்க சொல்லித் தருவதால் இளைஞர்களுக்கு பாலியல் வன்முறை சாதாரண நிகழ்வாக மாறுவது பெரிய விசயமாகப் படுவதேயில்லை.
போர்னோகிராபி பார்க்கும் பழக்கம் அதிகரிப்பதற்கு இணங்க நிஜ உலகில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுபவர்களின் வயதும் கணிசமாக குறைந்துள்ளது. ஆகவே ஃபோர்னோ தளங்களை சரோஜாதேவி புத்தகத்தின் ஈ-பதிப்பு என்று குறைவாக மதிப்பிட்டு விட இயலாது. அமெரிக்க நீதித்துறை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வெளியான அறிக்கை ஒன்றின்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து செய்யும் குழுவான பாலியல் வல்லுறவுக் குற்றம் 1994-98 இல் 7 சதவீதமாக இருந்து, 2005-10 இல் 10% ஆக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் இப்படி வல்லுறவுக்குள்ளாக்கிய காட்சியை பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் ஏற்றுவது இளைஞர்களின் ஆண்மைக்கு அடையாளமாக மாறி உள்ளது. பெண்களை போகப்பொருளாகப் பார்ப்பது, பாலியல் உறவுக்கான கருவி என ஸ்டீரியோடைப்பாக பார்க்கப் பழகிய இவர்களை அடுத்த கட்டமாக அந்த அரைத்த மாவில் கல் தோசை, மசாலா தோசை, பொடி தோசை என சுட வைக்கும் வேலையை சோசியல் மீடியா செய்யத் தூண்டுகிறது. ஏற்கெனவே உள்ள ஆணாதிக்க சமூக கட்டமைப்பும், வளர்ந்து வரும் நுகர்வு மோகமும் ஒரே பெண்ணிடம் விதவிதமான உறவு என வெரைட்டி காண்பிக்கிறது. தன்னைப் போன்ற ஒரு சக பயணி என்ற உணர்வு இந்த அமெரிக்க பாணி இளைஞனிடம் சுட்டுப்போட்டாலும் வராது.
க‌டந்த ஆண்டு அமெரிக்க நாட்டின் ஓகியோவிலுள்ள ஸ்டூபன்வில் உயர்தரப் பள்ளியில் நடந்த குழுவான பாலியல் வன்முறையில் பல மாணவர்கள் இணைந்து ஒரு மாணவியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து போட்டனர். இக்குற்றத்தில் சாட்சியாக இருந்த மாணவர்கள் இதனை ஒரு வல்லுறவு என்று நினைக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஹ்தா பார்த்தன்ஸ் என்ற அமெரிக்க மாண
வியும், ஆட்ரே போட்ஸ் என்ற கனடா மாணவியும் இதே போன்ற நிகழ்வால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போர்னோ தளங்களில் உண்மையான பாலியல் காட்சி என்று போட்டால்தான் மவுசு அதிகம். அது அமெரிக்காவில் தோழிகளை படம் பிடிப்பதாக இருந்தால், இந்தியா போன்ற நாடுகளில் தன்னிடம் வேலை பார்க்கும் பதின்ம வயதுப் பெண்களை மிரட்டி படம் பிடிப்பதாக உள்ளது. இந்த இடத்தில்தான் சமூக தளமும், போர்னோ தளமும் பிரியும் கோடு அழியத் துவங்குகிறது. போர்னோ தளத்தில் பார்த்த போது தெரிந்த கற்பனையான பக்கத்து வீட்டு ஆண்டி இப்போது சக மாணவியாக, உடன் வேலை செய்பவராக மாறத் துவங்குகிறது. நேரடியாக போர்னோ தளத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியாவிட்டாலும், இத்தளங்களை பார்ப்பதன் அதீதம் காரணமாக நிறைய மணமுறிவு, விவாகரத்துகள் நடந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
‘மூன்றாண்டு வரை தண்டனை தருமளவுக்கு ஏதேனும் சட்டம் இருக்கிறதா? என்ன வரைமுறைப்படுத்த உள்ளீர்கள்’ என்றெல்லாம் கேட்டு மத்திய அரசின் அமைச்சகங்கள் சிலவற்றுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது நீதிமன்றம். ஏப் 29 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ‘போர்னோ பார்ப்பதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்’ என்பது போன்ற சட்டங்கள் போடப்படலாம். சினிமாவுக்கு இருப்பது போல சென்சார் போடுவது சாத்தியமில்லை என்றாலும் கட்டுப்பாடுகள் விதிப்பார்களா? எனத் தெரியவில்லை. ஆனால் போர்னோ தளங்கள் வெறும் கள்ளக் குழந்தை மட்டுமல்ல. மனித சமூகம் பண்பட எடுத்துக்கொண்ட பல நூற்றாண்டு காலத்தை பின்னோக்கி செலுத்த சில நிமிடங்கள் மட்டுமே அதற்கு தேவைப்படுகிறது. நிழலை நிஜமாக்க இளைஞர்கள் முந்துகிறார்கள். பாலியல் சுதந்திரம், எழுத சுதந்திரம் என கட்டற்ற சுதந்திரம் கடைசியில் பெண்களது உயிரோடும், சமத்துவமாகவும், சுய மானத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பறித்து விடுகிறது.
நன்றி மூலக்கட்டுரை :http://www.thehindu.com/opinion/op-ed/freedom-that-must-have-limits/article4663661.ece
நன்றி: வினவு